தொடர்ந்து நடந்து வரும் கொலை-கொள்ளை சம்பவங்கள்
- தேவகோட்டையில் தொடர்ந்து நடந்து வரும் கொலை-கொள்ளை சம்பவங்களை போலீசார் குற்றவாளிகளை பிடிக்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
- இந்த சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட தாய்-மகள் இறந்து விட்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நாட்டார்கள், நகரத்தார்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அதற்கு சான்றாக பழங்கால வீடுகள் அரண்மனை போல் காட்சியளித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் பூட்டி கிடக்கும் வீடு களை குறிவைத்து கொள்ளையிலு ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால், கொள்ளையர்கள் வீட்டுக்கு தீ வைத்து சென்று விடுகின்றனர்.
ஆறாவயல் கிராமத்தில் உள்ள முதல்-அமைச்சரின் உறவினர் வீட்டில் கதவை உடைத்து தங்கம் மற்றும் வைர நகைகள் திருடிய சம்பவம் நடந்தது. மேலும் அடுத்தடுத்த வீடுகளிலும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. கோட்டூர் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 90 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.
தேவகோட்டை நகரில் அண்ணா சாலையில் பேராசிரியர் வீட்டில் 100 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. அண்ணா சாலை பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உறவினர் வீட்டில் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் திருடப்பட்டன. அருகில் உள்ள வீடுகளின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டது.
மனைவியை உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றபோது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற்றி விட்டு வந்து பார்த்தபோது வீட்டில் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவரங்காடு பகுதி யில் வங்கி பணியாளர் வீட்டில் பகல் நேரத்தில் 48 பவுன் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டது. மேலும் இடையன்காளி கோவில், முத்து பெரியநாயகி கோவில், இரவுசேரி காளியம்மன் கோவில், கற்படை அய்யனார் கோவில் உள்பட சில கோவில்களில் கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்துள்ளது. இங்கு கண்காணிப்பு காமிரா இருந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது மர்மமாக உள்ளது.
தேவகோட்டை நகரில் வளர்ந்து வரும் பகுதியான ராம் நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டது. அவ்வாறு பொருட்கள் இல்லாத ராணுவ வீரர் வீடு உள்பட பல வீடுகளுக்கு கொள்ளையர்கள் தீ வைத்து சென்ற சம்பவம் நடந்தது.இந்த சம்பவங்களில் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்க படாமல் உள்ளனர். இதற்கு போலீ சாரின் மெத்தனமே முக்கிய காரணம் என்று பொதுமக்கள் கூறுகின்ற னர்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் தாய், மகள், பேரன் ஆகியோரை அரிவாளால் வெட்டி வீட்டில் திருமணத்துக்காக வைத்திருந்த நகைகள் உட்பட 60 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட தாய்-மகள் இறந்து விட்டனர். பேரன் ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இனிமேல் இதுபோல் சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். அதில் குற்றவாளிகளை வருகிற 31-ந்தேதிக்குள் போலீசார் கைது செய்யாவிட்டால் 1-ந்தேதி கிராம மக்கள் ஒன்று திரண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இருந்தபோதிலும் கொலை யாளிகள் இன்னும் கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்படவில்லை.
இது கிராம மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.