காரைக்கால் தனியார் பெட்ரோல் பங்கில் இருந்து தமிழகத்திற்கு டீசல் கடத்தல்: பங்க் மேலாளர் உள்பட 3 பேர் கைது
- காரைக்காலில் இருந்து டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர்.
- தமிழகத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.94 வரை விற்பனை செய்யப்படுவதால், இந்த கடத்தல் என லாரி ஓட்டுநர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த அம்பத்தூர் பகுதியில், திருநள்ளாறு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது காரைக்கால் அடுத்த பச்சூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் இருந்து, தமிழக பகுதியான சேலத்திற்கு, 12,000 லிட்டர் டீசல் கடத்தி சென்றது தெரியவந்தது. காரைக்காலில் ஒரு லிட்டர் டீசல் ரூ.86 என்றால், தமிழகத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.94 வரை விற்பனை செய்யப்படுவதால், இந்த கடத்தல் என லாரி ஓட்டுநர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து, தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மாரிச்செல்வன் (வயது 25), பெட்ரோல் பங்க் மேலாளர் ராஜ்குமார் (38), ஊழியர் மதிமாறன் (48) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கைது செய்யப்பட்ட 3 பேரையும், கடத்தல் லாரியையும் ஒப்படைத்தனர்.