தீபாவளி சீட்டு பணத்தால் வெடித்த சண்டை.. தந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற மகன் - போலீசில் சரண்
- மதுரையை சேர்ந்த கார்த்திக் தீபாவளி சீட்டு பிடித்து வந்தார்.
- தீபாவளி சீட்டு பணத்தில் ரூ.3 லட்சத்தை மகன் கார்த்திக்கிடம் இருந்து அவரது தந்தை லோகநாதன் வாங்கியிருந்தார்.
மதுரை, அக்.16-
மதுரை வில்லாபுரம் பகுதியில் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அப்பள கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். லோகநாதனுக்கு கார்த்திக் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் கூட்டுக்குடித்தனமாக வசித்து வந்தனர்.
சமீபத்தில் கார்த்திக் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கார்த்திக் தீபாவளி சீட்டு பிடித்து வந்தார். இதற்காக அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோரிடம் பணம் வசூலித்து வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருந்தார். அதனை தீபாவளி பண்டிகையின் பணம் வசூலித்தவர்களுக்கு பலகாரம், பரிசுப்பொருள் மற்றும் வட்டியுடன் கொடுக்க திட்டமிட்டு இருந்தார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபாவளி சீட்டு பணத்தில் ரூ.3 லட்சத்தை மகன் கார்த்திக்கிடம் இருந்து அவரது தந்தை லோகநாதன் வாங்கியிருந்தார். தீபாவளிக்கு முன்னதாக அந்த பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் அவர் உறுதியளித்து இருந்தார். ஆனால் தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது வரை லோகநாதன் ரூ.3 லட்சத்தை திருப்பித்தரவில்லை.
இதுதொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு அந்த பணத்தை கார்த்திக் தந்தையிடம் கேட்டபோது மீண்டும் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக், தந்தை என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லோகநாதனை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
பின்னர் அவர் நேராக அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கொலையுண்ட லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கார்த்திக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீபாவளி சீட்டு பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பித்தராத தந்தையை மகனே கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது