உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட புள்ளி மானை படத்தில் காணலாம்

தெரு நாய்களிடம் சிக்கிய புள்ளிமான்

Published On 2023-03-05 09:47 GMT   |   Update On 2023-03-05 09:47 GMT
  • பொதுமக்கள் தெரு நாய் கூட்டத்தை விரட்டி அடித்து புள்ளி மானை மீட்டனர்.
  • கொட்டகையில் கட்டி வைத்து அவற்றுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

 பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டத்தில் 37 சதவீத வனப்பகுதியில் அரிய வகை விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி பகுதியில் காப்புக்காடுகள் அதிக அளவில் உள்ளது. இந்தப் பகுதியில் வன விலங்குகளும், புள்ளிமான் இனமும் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. கோடை காலம் தொடங்க உள்ளதால் தண்ணீர் தேடியும் , உணவு தேடி ஊருக்குள் வரும்போது தெரு நாய்கள், வேட்டை நாய்களிடம் சிக்கி அதிக அளவில் இறந்து வருகின்றன.

இவற்றை தடுக்கும் பொருட்டு வனத்துறையினரும், வனபகுதிகளை ஒட்டி உள்ள விவசாயிகள் இடத்திலும் பொதுமக்களிடத்திலும் தப்பி வரும் மான்களை காப்பாற்றுவதற்கான வழிமுறைகளை கூறி வருகின்றனர்

குறிப்பாக கிணறுகளுக்கு சுற்றியும் தடுப்புச் சுவர் அமைப்பது, கம்பிவேலி அமைப்பது, துணிகளை சுற்றி அடையாளப்படுத்துவது, விவசாயத் தோட்டங்களுக்கு வேலி அமைப்பது, வனவிலங்குகள் வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுப்பது போன்ற பணிகளை கிராமங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொம்மிடி தருமபுரி மெயின் ரோட்டில் மேம்பாலம் அருகில் கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலப் பகுதியில் அருகில் உள்ள முருகர் மலையில் இருந்து 1 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று வேகமாக சென்றது. அதை கவனித்த தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து அந்த மானை வேட்டையாடத் தொடங்கியது. இதில் மான் தெருநாய்களிடம் சிக்கிக் கொண்டதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் தெரு நாய் கூட்டத்தை விரட்டி அடித்து புள்ளி மானை மீட்டனர். அவற்றை விவசாய தோட்டத்தில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்து அவற்றுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

தகவலின் பேரில் மொரப்பூர் வனச்சரகர் ஆனந்தகுமார் சம்பந்தப்பட்ட பொம்மிடி வனவர் ரவிக்கு தகவல் தெரிவித்தார். அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர் கபிலன் மானை மீட்டு அருகில் உள்ள கேத்து ரெட்டிப்பட்டி கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டு விட்டனர்.

Tags:    

Similar News