உள்ளூர் செய்திகள்

கனமழையால் பாறைகள் உருண்டு பாதை துண்டிப்பு: நடந்தே பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள்

Published On 2024-11-04 07:40 GMT   |   Update On 2024-11-04 07:40 GMT
  • பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்.
  • மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம்:-

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது அகமலை ஊராட்சி.

இப்பகுதி போடி தாலுகாவிற்கு உட்பட்டது என்றாலும் சாலை வசதி என்பது பெரியகுளம் சோத்துப்பாறை அணை வழியாகவே உள்ளது.

இந்த ஊராட்சியில் கண்ணகரை, அலங்காரம், பட்டூர், பரப்பம்பூர், அண்ணா நகர், கரும்பாறை, குறவன் குழி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது.

இந்த மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சாலை 2 கி.மீ.தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து இன்று பள்ளிகளுக்கு செல்லும் மலை கிராம பள்ளி மாணவ-மாணவிகள் சாலையில் தேங்கியுள்ள மண் மற்றும் சகதிகளை கடந்தும், சாலையில் சரிந்துள்ள புதர்கள் மற்றும் மரங்களைக் கடந்து 10 கி.மீ. தூரத்திற்கு உள்ள பாதையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மலை கிராம மக்களின் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்குவதற்கும், விவசாய விளை பொருட்களை விற்பனைக்காக பெரியகுளத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, நடந்து செல்லவும் வழியில்லாத நிலை உள்ளதால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் மலைகிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சாலையில் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு கடந்த மாதம் அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

அதிகாரிகள் சமரசம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். ஆனால் அதன்பிறகும் சாலை ஏற்படுத்தி தராததால் தற்போது பெய்த கனமழைக்கு மலைகிராம மக்கள் பாதிக்கப்பட்டு ள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

எனவே விரைந்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News