உள்ளூர் செய்திகள்

புத்தம் புது வடிவில் தமிழக அரசின் இணையதளம்: திட்டங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்

Published On 2024-11-28 02:26 GMT   |   Update On 2024-11-28 02:26 GMT
  • முகப்பில் அரசின் முன்னோடி திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
  • முதலாவதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்ளது.

சென்னை:

தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளமான https://www.tn.gov. in/ பொதுமக்களுக்கு பல்வேறு தகவல்களை வழங்குகிறது. அதில் கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் துறைரீதியான அதிகாரிகள் யார், யார் என விவரங்கள் இருக்கும்.

இதுதவிர அரசின் செய்திகள், அரசாணைகள் போன்றவற்றையும் பொதுமக்கள் அதில் பார்த்து கொள்ளலாம். அதேபோல் ஒவ்வொரு துறையின் அலுவலகங்கள் மற்றும் தொடர்பு எண்களும் அதில் இடம்பெற்று இருக்கும்.

இந்த நிலையில், இந்த இணையதளத்தை தமிழக அரசு முழுவதுமாக புத்தம் புது வடிவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மாற்றி அமைத்துள்ளது.

இந்த இணையதளத்தின் முகப்பு பக்க மெனுவில் அரசாங்கம், துறைகள், மாவட்டங்கள், ஆவணங்கள், சேவைகள், திட்டங்கள், செய்திகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்கள், அரசாங்கத்தை தொடர்பு கொள்ளுதல் ஆகிய விவரங்கள் உள்ளன.

முகப்பில் அரசின் முன்னோடி திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் முதலாவதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்ளது. அதன்பின் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணத்திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

நாம் அதில் எந்த திட்டத்தை தேர்வு செய்தாலும், அந்த திட்டம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அதன்கீழ் பகுதியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பான விவரங்கள், தொடர்பு விவரங்கள், முதலமைச்சரின் எக்ஸ் வலையதள பதிவு விவரங்கள், சட்டங்கள், விண்ணப்பங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

முன்பு இருந்த வடிவமைப்பைவிட, இப்போது அதில் பல்வேறு கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு அரசின் திட்டங்களை அந்ததந்த துறையின் இணையதளத்திற்கு சென்றுதான் பார்க்க முடியும்.

ஆனால் முக்கிய திட்டங்களையும் அதில் நேரடியாக காணலாம். மிகவும் வண்ணமயமாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் பல்வேறு தகவல்களுடன் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு இது மிகுந்த பயன் அளிக்கும்.

Tags:    

Similar News