ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்கால்- மகாபலிபுரம் இடையே 30-ந்தேதி கரையை கடக்கும்
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டம் தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.
- 30-ந்தேதி 50 முதல் 60 கி.மீ. வேக காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு.
தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மதியம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழகத்தை நெருங்கியது.
இதன் காரணமாக மாலை 5.30 மணியளவில் ஃபெங்கல் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது. ஆனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் மிகவும் குறைந்தது. மணிக்கு 3 கி.மீ. என்ற அளவிற்கு குறைந்தது.
நேற்றிரவு 11.30 மணியளவில் அசையாமல் அதே இடத்தில் நீடித்தது. இந்த நிலையில் திரிகோணமலைக்கு கிழக்கு- வடகிழக்கே 100 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 490 கி.மீ. தொலைவிலும், நாகைப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 410 கி.மீ. தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் (இன்று காலை சுமார் 11 மணியளவில்) சுறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. வரும் 30-ந்தேதி (நாளை மறுதினம்) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 50 முதல் 60 கி.மீ. வேக காற்றுடன் வடக்கு தமிழகம்- புதுச்சேரி கடற்கரை பகுதிகளான காரைக்கால்- மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.