கடலூர் அருகே 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதல்- 4 பேர் பலி
- தனியார் பஸ் டிரைவர் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
- பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பண்ருட்டி:
கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அதே போல திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூருக்கு மற்றொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.
இதில் திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக வந்த பஸ் மேல்பட்டாம்பாக்கம் அருகே வந்தது. அப்போது பஸ் முன்பக்கத்தில் டிரைவர் சீட்டிற்கு கீழே இருந்த டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடியது.
அப்போது கடலூரில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ்சின் டிரைவர் இதனை கவனித்தார். தாறுமாறாக வரும் பஸ் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் என்பதை கணித்து, பஸ்சை சாலையின் ஓரமாக இயக்கி மெதுவாக சென்றார்.
இருந்தபோதும் திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக வந்த தனியார் பஸ், கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு சென்ற பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தின் போது, இடி இடித்தது போல் பலத்த சத்தம் எழுந்தது. இதில் 2 தனியார் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
விபத்தில் 2 பஸ்சின் முன்பக்கமும் முற்றிலும் சேதமடைந்தது. முன்பக்க இடிபாடுகளுக்கு இடையே பயணிகளும், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களும் சிக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இதில் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த தனியார் பஸ் டிரைவர் அங்காளமணி (வயது 33), திருவெண்ணைநல்லூர் முருகன் (45), பண்ருட்டி சேமக்கோட்டையை சேர்ந்த சீனுவாசன் (55) என்பது தெரியவந்தது. மேலும், ஒருவர் அடையாளம் தெரியவில்லை. இவரது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 பஸ்களிலும் பயணம் செய்த 80-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. மேலும், பண்ருட்டி போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூருக்கு வந்த பஸ் டிரைவரை மீட்க முடியாத நிலை உருவானது. இவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி வந்தார். உடனடியாக தீயணைப்பு படை வீரர்களும், கிரேன், பொக்லைன் போன்ற எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது.
இதில் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய டிரைவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பண்ருட்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர்.
காலை 10 மணிக்கு நடந்த விபத்தின் மீட்பு பணிகள் 12 மணியளவில் முடிந்தது. படுகாயமடைந்தவர்களில் ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.