அழிக்கால் பகுதியில் 2-வது நாளாக இன்றும் கடல் சீற்றம்: வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்தது
- கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டத்தில் கடலில் ராட்சத அலைகள் எழும்பியது.
- கடல் நீர் வீடுகளுக்குள் செல்லாமல் இருக்கும் வகையில் மணல் மூடைகள் அடிக்கி வைக்கப்பட்டிருந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும்.
அப்போது ஏற்படும் ராட்சத அலைகள் ஊருக்குள் புகுந்து வருவது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் அழிக்கால் கடற்கரை கிராமங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டத்தில் கடலில் ராட்சத அலைகள் எழும்பியது. நேற்று மாலையில் வழக்கத்தை விட அலைகளின் வேகம் அதிகமாக இருந்தது.
இதனால் அழிக்கால் கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்தது. கடற்கரையையொட்டி உள்ள வீடுகளுக்குள்ளும் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள். ஒரு சில வீடுகளுக்குள் மணல் குவியல்களாக காட்சி அளித்தது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்தன.
ஒரு சில வீடுகள் முன்பு கடல் நீர் வீடுகளுக்குள் செல்லாமல் இருக்கும் வகையில் மணல் மூடைகள் அடிக்கி வைக்கப்பட்டிருந்தது. கடல் நீர் புகுந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். 50 பெண்களும், 15 ஆண்களும் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் கடல் சீற்றம் பற்றி தகவல் அறிந்ததும் விஜய்வசந்த் எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பாய் மற்றும் தலையணைகளை வழங்க ஏற்பாடு செய்தார்.
நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் மற்றும் அதிகாரிகளும் கடல் நீர் புகுந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். நேற்று இரவு அலையின் வேகம் குறைய தொடங்கியதையடுத்து வீடுகளை சூழ்ந்து இருந்த வெள்ளம் வடியத் தொடங்கியது.
இன்று காலையில் மீண்டும் ராட்சத அலைகள் எழும்பியது. அலைகள் கடற்கரையொட்டி உள்ள வீடுகள் வரை வேகமாக வந்து மோதி சென்றன. பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்திலேயே உள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கடல் சீற்றமாகவே காணப்பட்டது. எனவே கடற்கரையையொட்டி உள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்லும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கு மாறு கடலோர காவல் படை போலீசாரும், மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.