உள்ளூர் செய்திகள்

மயிலம் அருகே டிராக்டர் மீது லாரி மோதியதில் 3 வயது குழந்தை பலி

Published On 2024-04-27 08:55 GMT   |   Update On 2024-04-27 08:55 GMT
  • டிராக்டரில் பார்த்தபோது தனது இளைய மகன் தேவவிருதனை காணவில்லை.
  • குழந்தையை தேடிய போது, லாரியின் அடியில் சிக்கி பலத்த காயத்துடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மயிலம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த எடைபாலயம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 45). விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ராதிகா (35). இவர்களுக்கு மனுநீதி (6), தேவவிருதன் (3) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சிவா செங்கல்பட்டில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு ஹாலோபிளாக் கற்களை எடுத்துக்கொண்டு டிராக்டரில் புறப்பட்டார். அப்பொழுது அவரது குழந்தைகள், நாங்களும் வருவோம் என அடம் பிடித்ததால் குழந்தைகளையும் டிராக்டரில் அழைத்துக் கொண்டு சென்றார்.

இன்று காலை 7.30 மணிக்கு கூட்டேரிப்பட்டு மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கி வார சந்தையின் அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது டிராக்டரின் பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய டிராக்டர் சிறிது தூரம் வேகமாக சென்றது. அதிர்ச்சி அடைந்த சிவா டிராக்டரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார்.

டிராக்டரில் பார்த்தபோது தனது இளைய மகன் தேவவிருதனை காணவில்லை. குழந்தையை தேடிய போது, லாரியின் அடியில் சிக்கி பலத்த காயத்துடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து குழந்தையை மீட்ட சிவா, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

அப்போது, அங்கு வந்த தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், தந்தை கண்முன்னே குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலம் போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News