சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் 7½ கிலோ தங்கம் கடத்தல்- 20 பயணிகள் சிக்கினர்
- மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு விமானத்தில் வந்த 20 பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது.
- பயணிகளை அழைத்து சோதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் எடுத்து வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை:
கோவை பீளேமேடு அருகே சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், சார்ஜா போன்ற வெளிநாடுகளுக்கும், மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற வெளிமாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுகிறதா? என மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொள்வது வழக்கம். அப்படி கடத்தி வரப்பட்டால் அதனை பறிமுதல் செய்து சுங்கத்துறையிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த 9-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது.
இந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு விமானத்தில் வந்த 20 பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களை அழைத்து சோதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் எடுத்து வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் இதற்கான உரிய ஆவணங்கள் இருக்கிறதா? வரி செலுத்தி உள்ளீர்களா? என விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
உடனடியாக அதிகாரிகள் 20 பயணிகளிடம் இருந்து 7½ கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவற்றை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.