உள்ளூர் செய்திகள்

சோழவந்தான் அருகே 7 வயது சிறுவன் வெட்டிக்கொலை

Published On 2024-10-04 09:17 GMT   |   Update On 2024-10-04 09:17 GMT
  • சிகிச்சை பலனின்றி மிதுன் என்ற ஜிஸ்னு மாதேஷ் பாண்டியன் உயிரிழந்தான்.
  • சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனார் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் காலனி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது 40). இவருக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

பக்கத்து வீட்டில் வசிப்பவர் முத்துசாமியின் மகன் விவேக். இவருக்கும் உமாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அதனை தொடர்ந்து அவர்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.

உமா வீட்டை விட்டு விவேக்குடன் சென்றதால் மனவிரக்தியடைந்த அவரது கணவர் அய்யனார் கடந்த சில வருடங்களாக தனிமையில் வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் கேலி பேச்சுகளுக்கு ஆளானார்.

இதனால் ஆத்திரமடைந்த அய்யனார், நேற்றிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த முத்துசாமி, அவரது மனைவி தவமணி, பேரன் மிதுன் என்ற ஜிஸ்னு மாதேஷ் பாண்டியன் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டதால் அய்யனார் தப்பி ஓடிவிட்டார். அருகில் இருந்தவர்கள் சோழவந்தான் போலீசில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி மிதுன் என்ற ஜிஸ்னு மாதேஷ் பாண்டியன் உயிரிழந்தான்.

இதுகுறித்து சிறுவனின் தாய் அன்பரசி கொடுத்த புகாரின்பேரில் சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனார் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News