மதுரவாயலில் மர்ம காய்ச்சலுக்கு 8-ம் வகுப்பு மாணவி மரணம்
- சிறுமிக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
- காய்ச்சல் வந்த மூன்றே நாட்களில் மகளை இழந்து தவிக்கிறோம் என்று பெற்றோர் வேதனையுடன் தெரிவித்தனர்.
போரூர்:
மதுரவாயல் வேல்நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மனைவி சுஜிதா. இவர்களது மூத்த மகள் பூஜா (வயது 13). விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூஜாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மகளை அழைத்து சென்றனர். அப்போது பூஜாவுக்கு லேசான காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பூஜாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பூஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, மகளுக்கு டெங்கு காய்ச்சலா? பன்றி காய்ச்சலா ? அல்லது எச்1 என் 1 ப்ளூயன்சா வைரஸ் பாதிப்பா? என எந்தவிதமான உரிய விளக்கமும் டாக்டர்கள் இதுவரை எங்களுக்கு தெரிவிக்கவில்லை. காய்ச்சல் வந்த மூன்றே நாட்களில் மகளை இழந்து தவிக்கிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுமி வசித்த பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மண்டல சுகாதார அதிகாரி பிரபாகரன் கூறும்போது:-
சிறுமியின் மருத்துவ அறிக்கை இதுவரை எங்களுக்கு வரவில்லை. அதன் பின்னரே சிறுமி இறப்புக்கு என்ன காரணம் என்பது தெரியவரும் மேலும் 144-வது வார்டுக்கு உட்பட்ட அந்த பகுதியில் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் வழக்கமாக கொசு மருந்து அடிப்பது, மற்றும் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவது ஆகிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.