உப்பிலியபுரம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
- பாட்டி ராஜேஸ்வரி பச்சபெருமாள் பட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
- உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்ததன் பேரில் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சை பெருமாள் பட்டி தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்த சிவகுமார்-மேகலா தம்பதியினரின் ஒரே மகள் மெர்சி (வயது 14). தம்பதியர் இருவரும் பணி நிமித்தம் காரணமாக வெளியூரில் உள்ளனர்.
இதனால் மெர்சி, உறவினரான பாட்டி ராஜேஸ்வரி உடன் தங்கி, பச்ச பெருமாள்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
பாட்டி ராஜேஸ்வரி பச்சபெருமாள் பட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இரவு பள்ளிப் பணிகளை முடித்து ராஜேஸ்வரி வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் இருந்த மெர்சி தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அலறினார். இதுபற்றி உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில் நேற்று நள்ளிரவு துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ் குமரேசன், செபாஸ்டின் சந்தியாகு போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வீட்டில் தனியாக இருந்த மெர்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்ததன் பேரில் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.