உள்ளூர் செய்திகள் (District)

வேட்பாளர் பெயரை அறிவிக்கும் முன்பே காங்கிரசில் எதிர்ப்பு

Published On 2024-03-24 09:58 GMT   |   Update On 2024-03-24 09:58 GMT
  • அகில இந்திய காங்கிரஸ் தலைமை குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
  • நபருக்கு சீட்டு வழங்கும் பட்சத்தில் தேர்தல் வேலைகளில் ஈடுபடமாட்டோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. வேட்பு மனுதாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் நெல்லை மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. கட்சியினர் பலரும் போட்டி போட்டு சீட் கேட்பதால் யாரை வேட்பாளராக நிறுத்துவது? என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு சீட் கேட்டு அக்கட்சியின் மூத்த தலைவர்கள், இளம் தலைவர்கள் என ஒரு பட்டாளமே டெல்லியில் முகாமிட்டுள்ளது. இதற்கிடை யே சீட் எங்களுக்கு தான் வேண்டும் என்று கட்சியினர் போட்டி போட்டு கோஷ்டிகளாக செயல்பட்டு சீட் வாங்க காய் நகர்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு நபரை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு சீட்டு வழங்கக் கூடாது என்று கூறி மற்றொரு தரப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு இன்று காலை திரண்ட ஒரு பிரிவு காங்கிரசார் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த அந்த குறிப்பிட்ட நிர்வாகிக்கு சீட்டு வழங்கக் கூடாது, அவர் ராகுல் காந்தி பாதயாத்திரையின்போது அவரது உருவம் குறித்த பேனரை கிழித்தெறிந்தவர், கட்சிப் பணியில் ஈடுபடாமல் இருப்பவர் என்றும் கூறியதோடு, அந்த நபருக்கு சீட்டு வழங்கும் பட்சத்தில் தேர்தல் வேலைகளில் ஈடுபடமாட்டோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News