தமிழ்நாடு (Tamil Nadu)

கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலை கோனேரிப்பள்ளி பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதையும், வாகனங்கள் ஊர்ந்து செல்லுவதையும் காணலாம்.

ஓசூர், சூளகிரி பகுதிகளில் இடி, மின்னலுடன் விடியவிடிய கொட்டிய கனமழை

Published On 2024-10-21 03:56 GMT   |   Update On 2024-10-21 03:56 GMT
  • மழைநீர் அதிகம் தேங்கியதால் பள்ளங்கள் இருப்பது தெரியாத நிலையில் கார் உள்பட பல வாகனங்கள் சிக்கியது.
  • மழைநீர் சாலையில் இருந்து வடிய தொடங்கிய நிலையில் வாகனங்களை மெதுவாக இயக்கி சென்றனர்.

சூளகிரி:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

கடந்த சில தினங்கான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 10 மணி அளவில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை கொட்ட தொடங்கியது. இந்த மழை விடியவிடிய இன்று காலை வரை பெய்துள்ளது.

சூளகிரி, காமன் தொட்டி, அட்டகுறுக்கி, கோனேரி பள்ளி, சப்படி, ஓசூர், ஜூஜூவாடி, பேரிகை பாகலூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை உள்பட பல இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானர்.

இரவு பெய்த மழையால் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி பகுதியில் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது.

இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மழைநீர் அதிகம் தேங்கியதால் பள்ளங்கள் இருப்பது தெரியாத நிலையில் கார் உள்பட பல வாகனங்கள் சிக்கியது.

இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் சாலையை எளிதில் கடந்து சென்று விடலாம் என்று எண்ணி அவர்கள் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதனால் இருசக்கர வாகனத்தில் சைலன்சரில் தண்ணீர் நிரம்பி ஸ்டாட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஓசூருக்கு வேலைக்கு செல்லும் ஏராளமானோர் கடும் சிரமம் அடைந்தனர். வாகனத்தை சாலையோரம் உள்ள கடைகளில் நிறுத்தி விட்டு அவர்கள் பேருந்தில் ஏறி சென்று விட்டனர்.

தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவு தண்ணீர் தேங்கி இருந்ததால் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மழைநீர் சாலையில் இருந்து வடிய தொடங்கிய நிலையில் வாகனங்களை மெதுவாக இயக்கி சென்றனர்.

Tags:    

Similar News