உள்ளூர் செய்திகள்

அரக்கோணத்தில் திருட்டு வழக்கில் கைதான கணவன்-மனைவி தப்பி ஓட்டம்

Published On 2023-05-10 07:18 GMT   |   Update On 2023-05-10 07:18 GMT
  • அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள போலீஸ் புறக்காவல் மையத்தில் இருவரையும் அமர வைத்தனர். அப்போது போலீசார் அசந்த நேரத்தில் சுகன், தமிழ்செல்வி தப்பி சென்று விட்டனர்.
  • அரக்கோணம் பகுதியில் கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் . இவரது மனைவி சுசீலா (வயது 70).

இவர் வீட்டை பூட்டி விட்டு காட்டுப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்டு பூட்டை திறந்து நகை, பணத்தை திருடி சென்று விட்டனர்.

திருடிய ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.58 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். பணம் எடுத்தது குறித்து சுசிலா செல்போனுக்கு தகவல் வந்தது.

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் சுசிலா புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் பாராஞ்சி கிராமம் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்த சுகன் (25), இவரது மனைவி தமிழ்ச்செல்வி (22) ஆகியோர் சுசீலாவின் வீட்டுக் கதவை திறந்து மூக்குத்தி மற்றும் ஏ.டி.எம். கார்டை திருடியது தெரியவந்தது. கணவன்-மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களை பரிசோதனை செய்து உடல் சான்று பெறுவதற்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள போலீஸ் புறக்காவல் மையத்தில் இருவரையும் அமர வைத்தனர். அப்போது போலீசார் அசந்த நேரத்தில் சுகன், தமிழ்செல்வி தப்பி சென்று விட்டனர்.

இதை சற்றும் எதிர்பாராத போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் ரெயில் நிலையம், பஸ்நிலையம் போன்ற இடங்களில் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரக்கோணம் பகுதியில் கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News