பட்டப்பகலில் பைக் பெட்டியை உடைத்து ரூ.3.77 லட்சம் திருட்டு
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சம்புவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகு (வயது 48). பட்டு நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் ஆரணி தனியார் வங்கிக்கு பைக்கில் சென்றார்.
வங்கியில் இருந்து தனது கணக்கில் உள்ள ரூ.5 லட்சத்தை எடுத்தார். ஆரணி டவுன் பெரியகடை வீதியில் உள்ள நகைகடைக்கு சென்று தன் பெயரில் வைத்துள்ள நகைகளை மீட்பதற்காக சென்றார்.
இதனால் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மீதி தொகையான ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்தை பைக்கில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு நகை கடையின் உள்ளே சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பைக்கின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்தை திருடி சென்றனர்.
பின்னர் வெளியே வந்த ரகு வீட்டிற்கு செல்வதற்காக பைக்கை எடுக்க முயன்றார். அப்போது பைக்கின் பெட்டி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து ரகு ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் மர்ம கும்பல் பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
அதிக நடமாட்டம் உள்ள ஆரணி டவுன் பகுதியில் பட்டப்பகலில் பைக்கின் பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.