உள்ளூர் செய்திகள்

சவுகார்பேட்டையில் வங்கியில் தீ விபத்து - ஆவணங்கள் எரிந்து சேதம்

Published On 2022-10-22 09:17 GMT   |   Update On 2022-10-22 09:17 GMT
  • முதல் மாடி என்பதால் ராட்சத ஏணி மூலம் ஏறி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
  • பின்னர் 2 மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

ராயபுரம்:

சவுகார்பேட்டை தங்க சாலை தெருவில் சென்ட்ரல் பேங்க் இந்தியா கிளை 3 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் முதல் மாடியில் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வங்கியை மூடிவிட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர். இன்று காலை 7 மணி அளவில் வங்கியில் இருந்து புகை வருவதாக அக்கம் பக்கத்தினர் பூக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் கட்டிட பாதுகாவலரும் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். வடசென்னை மாவட்ட தீயணைப்பு அலுவலர் லோகநாதன், உதவி அலுவலர் சூரிய பிரகாஷ் ஆகியோர் தலைமையில் ராயபுரம், தண்டையார் பேட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைவாக வந்தன. 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

முதல் மாடி என்பதால் ராட்சத ஏணி மூலம் ஏறி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் 2 மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 4 கம்ப்யூட்டர்கள் மற்றும் அலுவலக பதிவேடுகள், ஆவணங்கள் எரிந்து நாசமாயின. வங்கி அதிகாரிகள் வந்த பிறகு தான் சேத விபரம் தெரியவரும். பணம் இருந்த அறை, நகைகள் உள்ள லாக்கர் இருந்த பகுதியில் தீ பற்றவில்லை என தெரிகிறது.

தீயணைப்பு வீரர்கள் விரைவாக வந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மற்ற அலுவலகங்கள் தீயில் இருந்து தப்பி. இது குறித்து பூக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News