திருச்சியில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர்- விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதா? அதிர்ச்சி தகவல்கள்
- ராக்கெட் லாஞ்சர் விவகாரம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அந்தநல்லூர் காவிரி ஆற்றின் கரையில் கடந்த மாதம் 30-ந் தேதி ராக்கெட் லாஞ்சர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த ராக்கெட் குண்டு 3 கிலோ 600 கிராம் எடையில் 60 சென்டிமீட்டர் நீளமும் இருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில் அது கொரியப் போரின்போது அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அந்த ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்தனர். அது அந்தநல்லூர் பகுதிக்கு எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் காவேரி ஆற்றின் கரையில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது காவிரி ஆற்றில் ராக்கெட் லாஞ்சர் ஒன்று மிதந்து வந்தது. இது குறித்து அங்கிருந்தவர்கள் ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராக்கெட் லாஞ்சரை பத்திரமாக மீட்டு அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். பின்னர் ராக்கெட் லாஞ்சரை அறிவியல் நிபுணர்கள் உடன் இணைந்து மண்ணுக்குள் பாதுகாப்பாக புதைத்து வைத்தனர்.
இதனையடுத்து, வெடி குண்டை செயல் இழக்கச் செய்யும் நிபுணர்கள் உடன் இணைந்து இதனை வெடிக்கச் செய்யப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சி காவிரியில் அடுத்தடுத்து கண்டெடுக்கப்படும் ராக்கெட் லாஞ்சர் விவகாரம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குண்டினை ராணுவ உயர் அதிகாரிகள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அந்த குண்டு கொள்ளிடம் ஆற்றில் மணலுக்கு அடியில் புதைக்கப்பட்டு வெடிக்க செய்யப்பட்டது. ராக்கெட் குண்டு கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகில் தான் முக்கொம்பு சுற்றுலா மையம் அமைந்துள்ளது.
முக்கொம்பு நடுக்கரை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை புலிகள் தமிழகத்தில் தங்கி பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.
அவகள் பயிற்சிக்கு பயன்படுத்திய ராணுவ தளவாடங்களை விட்டு சென்றிருக்கலாம் என்றும், அதில் மணல் அரிப்பு காரணமாக ராக்கெட் குண்டுகள் வெளியே வந்து கண்ணில் பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.