செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் திடீர் மரணம்
- செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதாகும் சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 40-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்போது சீர்திருத்தப் பள்ளியில் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி தாம்பரம் பகுதியில் ரெயில்வே பொருட்களை திருடியதாக தாம்பரம் அடுத்த குப்பைமேடு, கண்டபாளையத்தை சேர்ந்த பழனி என்பவரது மகன் கோகுல் ஸ்ரீ (வயது17) யை தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை மறுநாள் (30-ந்தேதி) செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இந்த நிலையில் சீர்திருத்தப் பள்ளியில் இருந்த போது கோகுல் ஸ்ரீக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல் ஸ்ரீ இறந்து போனார். இதுபற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுவன் கோகுல்ஸ்ரீ எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. சீர்திருத்தப்பள்ளியில் சிறுவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.