ஜெயலலிதா பற்றி பேசியதால் மன்சூர்அலிகானுடன் அ.தி.மு.க.வினர் மோதல்
- ஆத்திரமடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பைக்கில் மன்சூர்அலிகான் வாகனத்தை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.
- அ.தி.மு.க. கட்சியை தவறாக பேசிய மன்சூர்அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
ஒடுகத்தூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் பசுபதி நேற்று குருவராஜபாளையம் பஸ்நிலையம் அருகே திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.
அப்போது, வேலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் நடிகர் மன்சூர்அலிகான் வேப்பங்குப்பம் நோக்கி வந்தார்.
அப்போது குருவராஜபாளையத்தில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த அ.தி.மு.க. வேட்பாளர் பசுபதியை பார்த்து மன்சூர்அலிகான், 'வணக்கம் பசுபதிசார் அவர்களே' தோற்று போக போகும் நீங்கள் வாக்கு சேகரித்துக் கொண்டு இருக்குறீர்களே, நீங்கள் தோற்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்'. அம்மாவை கொன்று விட்டு ஓட்டு கேட்க வந்துட்டீங்களே பாவிகளா? எனக் கூறிவிட்டு பிரசார வேனில் நின்றபடி வேகமாக சென்றார்.
இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பைக்கில் மன்சூர்அலிகான் வாகனத்தை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.
அதற்குள் அவர் வேப்பங்குப்பத்தில் உள்ள பள்ளிவாசல் உள்ளே தொழுகை செய்வதற்காக சென்று விட்டார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பள்ளிவாசல் முன் நின்று அ.தி.மு.க. கட்சியை தவறாக பேசிய மன்சூர்அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
மேலும் மன்சூர்அலி கானை வெளியே வரச் சொல்லுங்கள், அடிக்காமல் விட மாட்டோம். எங்கள் ஊருக்கு வந்து இந்த மாதிரி பேசுகிறார். அவரை அடிக்கிற அடியில் சென்னைக்கு ஓடி விடுவார் என மிரட்டல் விடுக்கும் பாணியில் கூச்சலிட்டு கடும் ரகளையில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இரு தரப்பினரையும் சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.