உள்ளூர் செய்திகள்

பள்ளி, கோவில்களை சீரமைக்க ரூ.2 கோடி வழங்கிய ராஜேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2023-08-17 08:16 GMT   |   Update On 2023-08-17 08:16 GMT
  • மதுரை தத்தநேரியை சேர்ந்த ராஜேந்திரன் திருப்பதி விலாஸ் என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார்.
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள புதுமண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாய் வழங்குவதாக ராஜேந்திரன் உறுதியளித்துள்ளார்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில், பல்வேறு சமூகப் நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் ராஜேந்திரனை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது, அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு, சால்வை அணிவித்து கருணாநிதியின் உருவச் சிலையையும் வழங்கி சிறப்பித்தார்.

மதுரை தத்தநேரியை சேர்ந்த ராஜேந்திரன் திருப்பதி விலாஸ் என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார். சமூகப் நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட அவர், மதுரை மாநகராட்சி, திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை 71 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள புதுமண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

சமூக அக்கறையோடு தொண்டாற்றி வரும் ராஜேந்திரனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி, அவரது சமூகப் நலப்பணிகள் தொடர்ந்திட வாழ்த்தினார்.

Tags:    

Similar News