நெல்லையில் கோஷ்டி மோதலில் தொழிலாளி வெட்டிக்கொலை- 4 பேருக்கு அரிவாள் வெட்டு
- மருதுவும், கார்த்திக்கும் சேர்ந்து பரமசிவத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
- மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கீதா மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லையை அடுத்த பேட்டை அருகே உள்ள மலையாளமேடு உடையவர் தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 50). இவரது மகன் மாரிசெல்வன். அதே பகுதியில் வசித்து வருபவர் மண்டையன் பெருமாள். தொழிலாளி.
இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவரது பெயர் ரவுடிகள் பட்டியலில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இவரது மகன்கள் மருது என்ற சுடலைமணி(வயது 27), லெட்சுமணன், கொம்பையா என்ற கார்த்தி(20). இதில் சுடலைமணி டிரைவராகவும், மற்ற 2 பேரும் விவசாய தொழிலாளிகளாகவும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீப காலமாக பரமசிவம் குடும்பத்தினருக்கும், மண்டையன் பெருமாள் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. அடிக்கடி ஒருவரையொருவர் முறைத்து பார்த்து கொள்வதும், பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமாக இருந்து வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பரமசிவம் சாப்பிட்டு முடித்துவிட்டு காற்று வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே தனது மகன் மாரிசெல்வத்துடன் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அவரது உறவினரான விக்கி என்பவரும் அவர்களுடன் நின்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் மண்டையன் பெருமாளின் மகன்கள் மருது, கார்த்தி, லெட்சுமணன் மற்றும் அவரது மருமகன் முருகபெருமாள் ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.
தொடர்ந்து 2 தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மருதுவும், கார்த்திக்கும் சேர்ந்து பரமசிவத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற அவரது மகன் மாரிசெல்வனுக்கும், விக்கிக்கும் வெட்டு விழுந்தது. இதனிடையே பதிலுக்கு மாரிசெல்வன் அரிவாளால் வெட்டியதில், முருகபெருமாளுக்கு வெட்டு விழுந்தது.
இதனை கேள்விப்பட்டு அங்கு வந்த மண்டையன் பெருமாளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த பேட்டை போலீசார் பரமசிவம் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வெட்டுக்காயம் அடைந்த 4 பேருக்கும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கோஷ்டி மோதலில் நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இதனால் அங்கு மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கீதா மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.