உள்ளூர் செய்திகள்

கோவை குனியமுத்தூரில் கருணாநிதிக்கு சிலை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-06-30 11:13 GMT   |   Update On 2022-06-30 11:13 GMT
  • கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில் இருந்து அதிகளவிலான தண்ணீர் பெற்று தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
  • துணை மேயர் வெற்றி செல்வன், கோவை குனியமுத்தூர் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார்.

கோவை:

கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா அரங்கில் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும், மேயர் கல்பனா தீர்மானங்கள் கொண்டு வாசித்தார். முதலில் கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில் இருந்து அதிகளவிலான தண்ணீர் பெற்று தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறுவாணி அணையில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து துணை மேயர் வெற்றி செல்வன், கோவை குனியமுத்தூர் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து இந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து தார்சாலை, குடிநீர், மழைநீர் வடிகால், வளர்ச்சி பணிகள் உள்பட மேலும் 32 தீர்மானங்கள் இந்த மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

7-வதாக பாதாள சாக்கடை இணைப்பு திட்டத்திற்கான வைப்பு தொகையை 10 தவணையாக செலுத்தலாம் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு கவுன்சிலர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News