தமிழக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்- விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம்
- ஆர்ப்பாட்டத்தில் மத்திய குழு உறுப்பினர், கோவை மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க வெளியிட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும்.
அன்னூர்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அன்னூர் தாலுகாக்களில் உள்ள 6 ஊராட்சிகளில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் சார்பில் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக 3,731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.
தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தொழிற் பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அன்னூர் கைகாட்டி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய குழு உறுப்பினர், கோவை மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க வெளியிட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும்.
பறிக்காதே, பறிக்காதே பெருமுதலாளிகளின் நலன் காக்க விவசாய நிலங்களை பறிக்காதே என்றும், திரும்ப பெறு திரும்ப பெறு நிலம் கையகப்படுத்த வெளியிடப்பட்ட அரசாணையை திரும்ப பெறு என்பது உள்பட பல்வேறு கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நமது நிலம் நமதே அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.