ஓ.பன்னீர்செல்வம்- டி.டி.வி. தினகரனுக்கு அ.தி.மு.க.வில் இடமில்லை- திண்டுக்கல் சீனிவாசன்
- பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. இப்போது மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- மக்கள் பிரச்சனைகளை ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் பேசுகிற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.
மதுரை:
தி.மு.க. அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை அ.தி.மு.க. பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-
அண்ணா தலைமை தாங்கிய தி.மு.க. இன்றைக்கு கருணாநிதியின் குடும்ப சொத்தாக மாறிவிட்டது. கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின், தற்போது அவரது மகன் உதயநிதி துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றுள்ளார்.
தி.மு.க.வில் எத்தனையோ மூத்த தலைவர்கள் இருக்கும் போது உதயநிதிக்கு ஏன் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. தி.மு.க. கருணாநிதி குடும்ப சொத்தாக மாறி விட்டது. துணை முதலமைச்சர் உதயநிதிக்கு தி.மு.க. தொடங்கிய வரலாறு தெரியுமா? எப்போதுமே தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்களை பற்றி சிந்திப்பது இல்லை. மக்கள் பிரச்சனைகளை ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் பேசுகிற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.
புரட்சி தலைவி அம்மாவுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிக சிறப்பான முறையில் ஆட்சியை தந்தார். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று தி.மு.க.வோடு சேர்ந்து கங்கணம் கட்டி செயல்பட்டவர்கள் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் போன்றவர்கள். இவர்கள் அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தது மட்டுமின்றி கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டார்கள். ஆனால் அ.தி.மு.க.வை எதிர்த்து அவர்கள் அனைவரும் மண்ணை கவ்வி விட்டனர்.
இப்போது ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனுக்கு ஒருபோதும் அ.தி.மு.க.வில் இடமில்லை.
பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. இப்போது மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் பொதுவுடமை பேசும் அதன் கூட்டணி கட்சிகள் தி.மு.க. அரசை கண்டிக்க தவறிவிட்டன. ஆனால் அ.தி.மு.க. மட்டுமே உண்மையான மக்களுக்கு பாடுபடும் இயக்கமாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.