உள்ளூர் செய்திகள்

தி.மு.க. நிர்வாகியின் தள்ளுவண்டி மீண்டும் அதே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள காட்சி.

மேயர் கணவர் மீது தி.மு.க நிர்வாகி அளித்த புகாரில் பரபரப்பு திருப்பம்

Published On 2023-07-27 09:59 GMT   |   Update On 2023-07-27 09:59 GMT
  • வியாபாரி அளித்த புகாரின் உண்மைத் தன்மையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.
  • 100 வார்டுகளிலும் ரோட்டோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றி வருகிறார்கள்.

கோவை:

கோவை மணியகாரம்பாளையம் கக்கன் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன். தி.மு.க நிர்வாகியான இவர் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கோவை 19-வது வட்ட தி.மு.க. பொறுப்பாளராக இருக்கிறேன். மணியகாரம்பாளையத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தள்ளு வண்டியில் இரவு நேரத்தில் 2 ஆண்டுகளாக இட்லி கடை நடத்தி வருகிறேன்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேயரின் கணவர் ஆனந்தகுமார் எனது கடைக்கு வந்தார். அப்போது அவர் என்னிடம், நான் கடை நடத்தி வரும் இடத்திற்கு வாடகையாக ஒரு தொகையினை கேட்டார்.

எனது குடும்பமே இந்த கடையில் இருந்து வரும் வருமானத்தில் தான் ஓடுகிறது. அப்படி இருக்கையில் நான் எப்படி பணம் கொடுப்பது என தெரிவித்தேன்.

அதற்கு அவர், பக்கத்தில் இருக்கும் கழிவறையை பராமரித்து, அதில் கட்டணம் வசூலித்து கொள்ளுங்கள். மாதம் எனக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து விட்டு மீதியை நீங்கள் வருமானமாக வைத்து கொள்ளுங்கள் என கூறினார். இலவசமாக கட்டப்பட்டு உள்ள கழிப்பிடத்துக்கு பணம் வசூலித்தால் நான் மாட்டிக்கொள்வேன் என்பதால் நான் மறுத்து விட்டேன். இதனால் அவர் மாநகராட்சி ஊழியர்களை வைத்து எனது தள்ளுவண்டி கடையை எடுத்து கொண்டு போய்விட்டார். மேலும் எனக்கு மிரட்டலும் விடுக்கின்றனர். எனக்கு பாதுகாப்பு இல்லை. எனவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

வியாபாரி அளித்த புகாரின் உண்மைத் தன்மையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.

இதற்கிடையே இன்று காலை தி.மு.க நிர்வாகியான ரங்கநாதனுக்கு ஒரு போன் வந்தது. அதில் நாங்கள் மாநகராட்சியில் இருந்து பேசுகிறோம். உங்கள் தள்ளுவண்டியை நீங்கள் வைத்திருந்த இடத்திலேயே வைத்து விட்டோம் என தெரிவித்தனர். இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு தள்ளுவண்டி நின்றிருந்தது. இதை பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

புகார் தொடர்பாக மேயர் கல்பனா கூறியதாவது:-

100 வார்டுகளிலும் ரோட்டோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றி வருகிறார்கள். தொட்டதெற்கெல்லாம் எனது கணவர் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

கக்கன் வீதியில் மாநகராட்சி கழிப்பறை சிதிலமடைந்து இருந்தது. அங்கு ஒருவர் கட்டில் போட்டு படுத்து கொண்டு கட்டணம் வசூலித்தார். கழிப்பறைக்கு அருகே ஸ்டாண்ட் வைத்து கொண்டு எப்போதும் 4 பேர் நிற்கின்றனர். பெண்கள் எப்படி அங்கு வருவார்கள்.

தள்ளுவண்டியை இரவில் நடத்தி விட்டு பகலில் எடுத்து செல்ல வேண்டும். ஆனால் அவர் நிரந்தரமாக அங்கு கூடாரம் அமைத்து ஆக்கிரமித்துள்ளார்.

இது தொடர்பாக பலமுறை தெரிவித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. தற்போது மாநகராட்சி அலுவலர்கள் சென்று அகற்றி உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைக்கு எனது கணவரை காரணம் சொல்கிறார்கள். தவறான தகவல்களை பரப்புகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News