தொடர் மழை காரணமாக வாய்க்காலில் கார் கவிழ்ந்து எலக்ட்ரீசியன் பலி
- சதிஷ்குமார் மாராங்காட்டூரில் இருந்து வள்ளிபுரம் கருக்கம் பாளையம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.
- சிலுவம்பாளையம் என்ற பகுதியில் வந்த போது வளைவில் திரும்பினார். மழை பெய்து கொண்டு இருந்ததால் ரோடு ஈரப்பதத்துடன் காணப்பட்டது.
சிவகிரி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வள்ளிபுரம் கருக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ்குமார் (40). எலக்ட்ரீசியன். இவர் சிவகிரி பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
சதிஷ்குமார் நேற்று இரவு வேலை முடிந்து சிவகிரியில் இருந்து இரவு 10 மணி அளவில் காரில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது சிவகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து கொண்டு இருந்தது.
சதிஷ்குமார் மாராங்காட்டூரில் இருந்து வள்ளிபுரம் கருக்கம் பாளையம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சிலுவம்பாளையம் என்ற பகுதியில் வந்த போது வளைவில் திரும்பினார். மழை பெய்து கொண்டு இருந்ததால் ரோடு ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்தானது.
இதில் காருக்குள் இருந்த சதிஷ்குமார் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இரவு நேரம் என்பதால் இது பற்றி யாருக்கும் தெரியவில்லை. இன்று காலை அந்த பகுதிக்கு வந்த விவசாயிகள் பார்த்த போது தான் கார் வாய்க்காலில் கவிழ்ந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் சிவகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் காருக்குள் பிணமாக கிடந்த சதிஷ்குமார் உடலை மீட்டனர். தொடர்ந்து கிரேன் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் வாய்க்காலில் கவிழ்ந்து கிடந்த காரை மீட்டனர்.
தொடர்ந்து சதிஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான சதிஷ்குமாருக்கு அபிநயா என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.