ஈரோடு பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை கடும் உயர்வு
- பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.
- மற்றும் மற்ற பூக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர்களில் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.
தினமும் சுமார் 4 டன் முதல் 5 டன் மல்லிகை உள்பட பல பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் பகுதியில் செயல்படும் பூ மார்க்கெ ட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
சத்தியமங்கலம் பூ மார்க் கெட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.
மேலும் விஷேசம், திருவிழா நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விற்பனை அதிகரித்து காணப்படும். அதே போல் வெளி மாநில திருவிழா காலங்களிலும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகளவில் நடக்கும்.
இதனால் விஷேசம் மற்றும் முகூர்த்த நாட்களில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.5 ஆயிரத்துக்கு மேல் விற்பனையாகும். இதே போல் சாதாரண நாட்களில் மல்லிகைப்பூ 1 கிலோ ரூ.500-க்கும் ஏலம் விற்பனையாகும்.
இந்த நிலையில் தற்போது தை மாதம் பிறந்ததால் முகூர்த்த நாட்கள் தொட ர்ந்து வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் கோவில் விழாக்களும் நடந்து வருகிறது. இதனால் மல்லிகை மற்றும் மற்ற பூக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இதனால் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் மல்லிகை உள்பட பூக்களின் அறுவடை குறைந்து வருகிறது. இதனால் தற்போது குறைந்த அளவே மல்லிப்பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதனால் மல்லிகைப்பூ மற்றும் மற்ற பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ 1160-க்கும், முல்லை 600-க்கும் காக்காடா ரூ.550-க்கும் சாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், அரளி ரூ.120-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் பனி பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாகவும் தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதாலும் மல்லி கைபூக்களின் தேவை அதிகரித்தது. இதனால் மல்லிகைப்பூ விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் மல்லிகை ரூ.1900 உயர்ந்து ரூ.4,620-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் மல்லிகை பூக்களின் விலை ரூ.3,460 வரை உயர்ந்து உள்ளது.
இதே போல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ ரூ.2,160-க்கும், முல்லை ரூ.1,445-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது. ஆனால் நேற்றும் பூக்கள் விலை உயர்ந்து மல்லிகை ரூ.4,620-க்கும், கனகாம்பரம், ரூ.850-க்கும், முல்லை ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக வியாபாரிகள் முன் கூட்டியே வந்து மல்லிகை பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் உடனடியாக மல்லிகை பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் ஈரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலும் வரத்து குறைவு காரணமாக மல்லிகை மற்றும் மற்ற பூக்களின் விலை அதிகரித்தது.
மேலும் வரும் நாட்களில் கோவில் விழாக்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.