ஆடி கிருத்திகை முன்னிட்டு காளை மாடுகளுடன் 161 படிகளை ஏறி சாமி தரிசனம் செய்த விவசாயி
- முருகன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர்.
- பால் குடங்கள் எடுத்து வந்து முருகனை வழிபட்டனர்.
கோபி:
ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர். முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோபி பச்சைமலை கோவிலில் இன்று காலை முதல் ஆடி கிருத்திகையை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பால் குடங்கள் எடுத்து வந்து முருகனை வழிபட்டனர்.
அப்போது கோபிசெட்டி பாளையம் அடுத்த கொங்கர்பாளையத்தை சேர்ந்த விவசாயி பெருமாள் சாமி என்பவர் இன்று காலை கோபி பச்சைமலை கோவிலுக்கு தனது 2 காளைகளுடன் வந்திருந்தார்.
பின்னர் பால் குடத்துடன் பெருமாள் சாமி தனது 2 காளையுடன் 161 படிகளை ஏறி முருகனை வழிபட்டார். தனது மாடுகளுடன் முருகனை வழிபட வந்த பெருமாள் சாமியை கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.