உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் 2 மாத பெண்குழந்தையை கல்மீது வீசி கொன்ற தந்தை

Published On 2023-08-07 06:34 GMT   |   Update On 2023-08-07 06:34 GMT
  • பெற்ற குழந்தையை கல் மீது வீசி தந்தையே கொடூரமாக கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தார்.

திருவள்ளூர்:

ஆந்திரா மாநிலம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(25), இவரது மனைவி அஞ்சலி(23). இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்பட மொத்தம் 4 குழந்தைகள் இருந்தனர்.

சுரேஷ் தனது குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி திருவள்ளூர் பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் குடும்பத்துடன் பெரியகுப்பத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலம் கீழ் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சுரேசின் 2 மாத பெண் குழந்தை தொடர்ந்து அழுதது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் குழந்தைக்கு பால் கொடுக்ககோரி மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு இருந்தது. இதனால் கோபம் அடைந்த சுரேஷ் தனது 2 மாத குழந்தையை அருகில் சமையல் செய்ய வைத்திருந்த கல் மீது வீசினார். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை மயங்கி சரிந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அஞ்சலி அலறி துடித்தபடி குழந்தையை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்து போனது.

இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தார். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

கைதான சுரேசுக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று இரவும் அவர் அதிக போதையில் இருந்து உள்ளார். குழந்தை தொடர்ந்து அழுததாலும், குழந்தைக்கு பால் கொடுக்க மறுத்து மனைவி தகராறில் ஈடுபட்டதாலும் ஆத்திரம் அடைந்த அவர் குழந்தையை கல்மீது வீசி கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

பெற்ற குழந்தையை தரையில் வீசி தந்தையே கொடூரமாக கொன்ற சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூரை அடுத்த கொசவம்பாளையம் பகுதியில் கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை கணவரை இழந்த பெண் குழிக்குள் வீசி கொலை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News