சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் அதிகரிப்பு
- சென்னையில் இருந்து டெல்லி மும்பை, பெங்களூரு, மதுரை போன்ற நகரங்களுக்கு வழக்கமாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதை தவிர்த்து ரெயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
- விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக விமான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எரிபொருள் விலை 16.3 சதவீதம் மீண்டும் உயர்ந்து இருக்கிறது.
ஆலந்தூர்:
கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து 2 வருடங்களுக்கு பின்பு சென்னை விமான நிலையத்தில் மீண்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக உள்நாடு மற்றும் உள் மாவட்ட பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமான டிக்கெட் கட்டணம் தற்போது உயர்ந்து உள்ளது. விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
சென்னையில் இருந்து மதுரை செல்ல விமான கட்டணம் ரூ. 5,500-ல் இருந்து 7,500 ஆக உயர்ந்து உள்ளது. அதேபோல் டெல்லிக்கு ரூ.9,500- ரூ.10,000, திருச்சிக்கு ரூ.3,500- ரூ.5000, கோவைக்கு ரூ.5,500- ரூ.6000, ஐதராபாத்துக்கு ரூ.6000-ரூ.6500, மும்பைக்கு ரூ.8600-ரூ.9000, பெங்களூருக்கு ரூ.5500-ரூ.6000 ஆக கட்டணம் அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து விமான டிக்கெட் ஏஜெண்ட்டுகள் கூறும்போது, இந்த அளவுக்கு விமான கட்டணம் உயர்வுக்கு விமானத்தின் எரிபொருள் விலை உயர்ந்தது தான் காரணம். இதனால் நடுத்தர மக்கள் விமான பயணத்தை தவிர்ப்பது அதிகமாகி வருகிறது.
நடுத்தர வர்த்தக பயணிகள் விமான பயண கட்டணத்தை பற்றி இப்போது பயப்படுகிறார்கள். அத்தியாவசியமற்ற பயணங்களை அவர்கள் குறைத்து கொள்கிறார்கள்.
அதுமட்டுமின்றி பயணத்தை மிச்சப்படுத்த பயணம் செய்வதற்கு 4 முதல் 5 வாரங்களுக்கு முன்பாகவே விமான டிக்கெட்டை புக் செய்கிறார்கள. அவசரமாக விமான பயணத்தை மேற்கொள்வோர்களுக்கு விமான கட்டணம் அதிகரித்து வருகிறது.
சென்னையில் இருந்து டெல்லி மும்பை, பெங்களூரு, மதுரை போன்ற நகரங்களுக்கு வழக்கமாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதை தவிர்த்து ரெயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக விமான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எரிபொருள் விலை 16.3 சதவீதம் மீண்டும் உயர்ந்து இருக்கிறது என்றனர்.