உள்ளூர் செய்திகள்

மழைக்கால நோயில் இருந்து மக்களை காக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2024-11-03 08:05 GMT   |   Update On 2024-11-03 08:05 GMT
  • கடந்த காலத்தில் மழை, கனமழை, அதி கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றால் மக்கள் அனுபவித்த சிரமங்கள், துன்பங்கள் ஏராளம்.
  • பொதுமக்களும் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடலோரப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய அறிவிப்பு தெரிவிக்கிறது. இதனால் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழையோ கனமழையோ பெய்ய வாய்ப்புண்டு.

கடந்த காலத்தில் மழை, கனமழை, அதி கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றால் மக்கள் அனுபவித்த சிரமங்கள், துன்பங்கள் ஏராளம்.

குறிப்பாக விவசாய நிலங்கள் மழையால், புயல், வெள்ள நீரால் சேதமடைந்து, பயிர்கள் பாழாகி, விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தார்கள். மேலும் மக்களும் மழைக்கால நோயினால் பாதிக்கப்பட்டார்கள்.

இப்படி மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால் பெரும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். பொதுமக்களும் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

தமிழக அரசு, மழைக்காலத்தில் சென்னை உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகள் என மாநிலத்தில் எங்கு மழை பெய்தாலும் மக்களை, விவசாயத்தை, கால்நடைகளை பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, மக்களுக்கு துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News