ஓசூர் ரவுடி வெட்டிக்கொலை வழக்கில் வாலிபர் உள்பட 3 பேர் கைது
- ஜாமீனில் திலக் வந்த நிலையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
- கொலை சம்பவத்தில் தொடர்புடைய, தலைமறைவாகியுள்ள வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி பக்கமுள்ள சொப்பட்டியை சேர்ந்தவர் திலக் (24). ரவுடி ஆவார். கடந்த 12-ந் தேதி ஓசூர் பெரியார் நகர் டீக்கடை அருகில் இவரை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் கொலை செய்யப்பட்ட திலக் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து கடந்த 1.1.2022 அன்று சொப்பட்டியை சேர்ந்த மோகன்பாபு என்பவரை கொலை செய்ததும், அந்த வழக்கில் திலக் உள்பட 6 பேரை மத்திகிரி போலீசார் கைது செய்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜாமீனில் திலக் வந்த நிலையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மோகன்பாபுவின் தந்தை திம்மராயப்பா என்பவரை ஓசூர் டவுன் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்கள்.
அதில் தனது மகன் மோகன்பாபுவை கொலை செய்ததற்கு பழிக்கு பழி வாங்கும் விதமான தான் மத்திகிரியை சேர்ந்த சசிகுமார்(24) என்பவர் மூலம் மேற்கண்ட கொலையை செய்ததாக கூறியிருந்தார்.
தொடர் விசாரணையில், திலக், டீ கடையில் இருந்த தகவலை, சசிகுமாருக்கு இவர்தான் தெரியபடுத்தினார் என்றும், திலக்கை கொல்ல சசிகுமாருக்கு திம்மராயப்பா பணம் கொடுத்ததும், தெரியவந்தது.
இதையடுத்து, திம்மராயப்பா, மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பி மகன் சிவகுமார்(24) மற்றும் தின்னூரை சேர்ந்த வெங்கடேஷ் (25) ஆகிய 3 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளியான சசிகுமார், நேற்று சங்ககிரி கோர்ட்டில் சரணடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய, தலைமறைவாகியுள்ள வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.