கடையம் பகுதியில் தோட்டத்தில் புகுந்து வாழைகளை நாசம் செய்த ஒற்றை யானை
- தென்னை மரங்களை தொடர்ந்து பல நாட்களாக யானைகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாதாபுரம் கானாவூர் அருகிலுள்ள சேகர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது.
இந்த தோட்டத்திற்குள் இன்று காலை ஒற்றை யானை ஒன்று புகுந்தது. பின்னர் 20-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை பிடுங்கித் தின்றுள்ளது.
மாதாபுரம் பெட்ரோல் பங்கில் இருந்து கடவாக்காடு செல்லும் சாலையில் உள்ள பனைமரத்தை ஒன்றை யானை பிடுங்கி குருத்தைத் தின்றுவிட்டு மரத்தைப் முறித்து விட்டு சென்று விட்டது. அதற்கு அருகில் உள்ள வெய்க்கால்பட்டி பரமசிவன் என்பவருடைய தோட்டத்தில் வாழை மரங்களை பிடுங்கி சேதப்படுத்தியது.
அந்த யானை காட்டுக்குள் செல்லாமல் விளைநிலங்கள் உள்ள பகுதிகளை சுற்றி தொடர்ந்து சுற்றி வந்தது.
தகவல் அறிந்ததும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கடையம் வனச்சரக வனச்சரகர் கருணாமூர்த்தி ஆலோசனையின் பேரில் வனக்காப்பாளர் ஆறுமுக நயினார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடையம் பகுதியில் திரவியம் நகர், பெத்தான் பிள்ளை குடியிருப்பு, மேலாம்பூர், ஆம்பூர், மாதாபுரம் போன்ற பகுதியிலுள்ள தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை மரங்களை தொடர்ந்து பல நாட்களாக யானைகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.