சென்னையில் நடந்த வினோத திருமணம்: தமிழக பெண்ணை கரம்பிடித்த வங்கதேச மங்கை
- திருமண பந்தம் ஆண்-பெண்ணுக்கு இடையேதான் என்பது மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.
- இயற்கைக்கு மாறாக ஒரு பாலினத்தினர் திருமணம் செய்துகொள்வது என்பது ஏதோ சமூகத்தில் வித்தியாசமாக தெரிந்தாலும், ஏற்றுக்கொள்ள பெரும்பாலானோர் முன்வருவது இல்லை.
சென்னை:
பொதுவாக திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நமது முன்னோர்கள் சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் சில திருமணங்கள் சமூக ஊடகங்களின் மூலம் மலரும் நட்பின் வாயிலாகவே நிச்சயிக்கப்படுகிறது. அதிலும், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களே அதாவது ஆண், ஆணையும், பெண், பெண்ணையும் தங்கள் வாழ்க்கை துணையாக கரம் கோர்த்து திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் வினோத சம்பவங்களும் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
அந்த வகையில் ஒரே பாலினத்தை விரும்பும் 'லெஸ்பியன்' ஜோடிகளான தமிழக பிராமண குடும்பத்தை சேர்ந்த சுபிக்ஷா சுப்பிரமணி என்ற பெண்ணும், வங்காளதேசத்தை சேர்ந்த டினா தாஸ் என்ற பெண்ணும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். சுபிக்ஷா தமிழக பாரம்பரிய முறைப்படி மடிசார் சேலை அணிந்தவாறு தனது தந்தையின் மடியில் அமர, எதிர் முனையில் பைஜாமா அணிந்தவாறு டினா தாஸ் உறவினரின் மடியில் அமர ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர்.
சுபிக்ஷாவின் தந்தை முறைப்படி கன்னிகாதானம் செய்து கொடுத்தார். சம்பிரதாயம் முடிந்ததும் இல்வாழ்க்கையில் சிறகடித்து பறக்கிறது லெஸ்பியன் ஜோடி. கை நிறைய சம்பளம் வாங்கும் ஆடிட்டரான சுபிக்ஷாவின் குடும்பம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை பூர்வீகமாக கொண்டது. மதுரையில் இருந்து அவருடைய குடும்பம் கத்தார் நாட்டுக்கும், பின்னர் அங்கிருந்து கனடாவில் உள்ள கல்கரி நகருக்கும் இடம் பெயர்ந்தது. சுபிக்ஷாவின் தாயார் பூர்ணபுஷ்கலா, கல்கரி நகரில் சிறுவர்களுக்கான பள்ளியை நடத்தி வருகிறார்.
வங்காளதேசத்தின் வடகிழக்கில் உள்ள சிறிய நகரான மூல்விபசாரை பூர்வீகமாக கொண்டவர் டினா தாஸ். இவருடைய சகோதரி, திருமணமாகி கனடாவின் மொண்ட்ரியால் நகரத்தில் வசித்து வந்தார். அவரோடு, கடந்த 2003-ம் ஆண்டு தனது பெற்றோரோடு ஐக்கியமாகினார் டினா தாஸ். சிறு வயதில் இருந்தே டினா தாசுக்கு லெஸ்பியன் உணர்வுகளில் ஈடுபாடு ஏற்பட்டது. இதனை ஒரு நோயாக கருதிய அவரது பெற்றோர், 19 வயதில் ஆண் ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் 4 ஆண்டுகளில் அந்த பந்தம் அறுந்து போனது.
லெஸ்பியன் உள்பட இரு பாலின உறவுகளில் நாட்டம் கொண்டவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சுபிக்ஷாவும், லெஸ்பியன் உறவில் ஈடுபடும் நபராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட டினா தாசும் சமூக ஊடகங்களின் மூலமாக பரீட்சயமாகி, கல்நகரி நகரில் சந்தித்து தங்களுடைய உறவை வளர்த்து வந்தனர். லெஸ்பியன் உறவுகொள்பவர்கள் கலந்துகொள்ளும் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். இதனால் டினா தாசுடன் பேசுவதை அவரது சகோதரி நிறுத்திக்கொண்டார். குடும்பம் அவரைவிட்டு, விலகி நின்றது.
காலமும், விடா முயற்சியும் அனைத்துக்கும் மருந்து போடும் என்பது போல சுபிக்ஷாவை அரவணைத்துக்கொண்டது டினா தாஸ் குடும்பம். மறுமுனையில் சுபிக்ஷா குடும்பமும் சமஸ்கிருத முறையில் திருமணத்தை நடத்தி, இல்லற வாழ்க்கைக்கு பச்சை கொடி காட்டி இருக்கிறது. சென்னையில் நடந்த வினோத திருமணத்தில் சுபிக்ஷா தரப்பில் அவருடைய தந்தையார் சுப்பிரமணி, தாயார் பூர்ணபுஷ்கலா மற்றும் 84 வயதான பாட்டி பத்மாவதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதுபோன்ற திருமணங்கள் நமது வழக்கப்படி நடப்பது இல்லை என்று பெற்றோர் பல முறை சுட்டிக்காட்டியும், எதிர்ப்பும் தெரிவித்தனர். ஆனால் டினா தாஸ் உடனான உறவை கைவிட விரும்பாத சுபிக்ஷா தனது பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுத்தார். இதுபோன்ற விவகாரங்களில் பெற்றோர்தான் மகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பார்கள். ஆனால் சுபிக்ஷா விஷயத்தில் நடந்தது வேறு. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த சுபிக்ஷா இறுதியாக டினா தாசை கரம் பிடித்திருக்கிறார்.
சுபிக்ஷா, டினா தாஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தை கனடாவில் பதிவு செய்துள்ளனர். கல்கரி நகருக்கு வினோத ஜோடி சிறகடித்து பறப்பதற்கு முன்பு, தெற்காசியாவுக்கு இன்ப சுற்றுலா செல்ல உள்ளனர்.
இதுகுறித்து சுபிக்ஷா கூறுகையில், "நாங்கள் நினைத்திருந்த கனவு இதுதான். அது நிறைவேறும் என்று ஒருபோதும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கடந்த 6 வருடங்களாக இருதரப்பினரின் குடும்பத்தினரோடும் ஒற்றுமையாக இருந்து எங்களுடைய மரபுகளின்படி சடங்குகளை முறையாக நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
சுபிக்ஷாவின் தாயார் பூர்ணபுஷ்கலா கூறும்போது, 'முதலாவதாக, இந்த திருமணத்தால் இந்தியாவில் உள்ள எங்களுடைய குடும்பத்தினர் உறவுகளை முறித்துக்கொள்வார்களோ என்ற அச்சம் இருக்கிறது. சுபிக்ஷா எப்படி இந்த சமூகத்தில் வாழ்வார். அவள் தாய்மை உணர்வு அடைவாளா? என்பதிலும் பயம் இருக்கிறது' என்றார்.
சுபிக்ஷாவின் பாட்டி பத்மாவதி, 'எங்கள் பிள்ளைகள் மனம் உடைந்து விலகிச் செல்வதை விடவும், எங்கள் பக்கம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்தோம். இருவருக்கும் இடையே சந்தேகம் ஏற்பட்டால், பயத்தை விட்டுவிட்டு அன்பை தேர்ந்தெடுக்கவேண்டும்' என்று கூறினார்.
திருமண பந்தம் ஆண்-பெண்ணுக்கு இடையேதான் என்பது மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. அதுபோன்ற இயற்கைக்கு மாறாக ஒரு பாலினத்தினர் திருமணம் செய்துகொள்வது என்பது ஏதோ சமூகத்தில் வித்தியாசமாக தெரிந்தாலும், ஏற்றுக்கொள்ள பெரும்பாலானோர் முன்வருவது இல்லை.