உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க வேஷ்டி-சட்டையில் வந்து அசத்திய வெளிநாட்டினர்

Published On 2022-11-20 10:15 GMT   |   Update On 2022-11-20 10:16 GMT
  • மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் சிறப்பு பெற்றது.
  • புராதன சின்னங்களை பார்வையிட கத்தார் நாட்டில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வந்திருந்தனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் சிறப்பு பெற்றது. இதனை பார்க்க வெளிநாட்டினர் அதிக ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

இந்த நிலையில் மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய வாரம் விழா நேற்று தொடங்கி வருகிற 25-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி விழாவின் முதல் நாளான நேற்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பகுதிகளை சுற்றுலா பயணிகள் இலவசமாக அருகில் சென்று சுற்றி பார்க்கலாம் என்று தொல்லியல்துறை அறிவித்து இருந்தது.

இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், பைக், பஸ்களில் மாமல்லபுரத்தில் குவிந்தனர். இதன்காரணமாக மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. சாதாரண நாட்களில் இந்தியர்களுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டவருக்கு ரூ.600-ம்நுழைவு கட்டணம் ஆகும்.

இந்த நிலையில் புராதன சின்னங்களை பார்வையிட கத்தார் நாட்டில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வந்திருந்தனர்.

அவர்கள் தமிழர்களே வியக்கும் அளவில் பாரம்பரிய வேஷ்டி-சட்டை அணிந்து வந்து அசத்தினர். அவர்களை மற்ற சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

Similar News