உள்ளூர் செய்திகள்

கம்முனு இருங்க.... இது என்ன வீடா...: நெல்லை எம்.பி.யை கண்டித்த அமைச்சர் வீடியோ வைரல்

Published On 2022-07-13 06:12 GMT   |   Update On 2022-07-13 07:15 GMT
  • குவாரிகள் மூடப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
  • அவருடன் இருந்த சபாநாயகர் அப்பாவு, எவ்வளவு நாட்களில் குவாரி திறக்கப்படும் என்பதை தெரிவிக்குமாறு கலெக்டர் விஷ்ணுவிடம் தெரிவித்தார்.

பணகுடி:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய சுற்றுவட்டார பகுதி தொழிற்கல்வி படித்த இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி தொடக்க விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சி.வி.கணேசன் அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, நெல்லை மாவட்டத்தில் தற்போது கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வேலை இல்லாமல் பலர் இருக்கின்றனர். மூலப்பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. குவாரி எப்போது திறக்கப்படும் என அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

இதனை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். அவருடன் இருந்த சபாநாயகர் அப்பாவு, எவ்வளவு நாட்களில் குவாரி திறக்கப்படும் என்பதை தெரிவிக்குமாறு கலெக்டர் விஷ்ணுவிடம் தெரிவித்தார்.

உடனே கலெக்டர் விஷ்ணு, இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. முழுமையான பரிசீலனைக்கு பிறகு குவாரிகள் திறக்கப்படும் என்று கூறினார்.

அப்போது சபாநாயகர் அருகில் இருந்த அமர்ந்திருந்த நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் திடீரென கோபமடைந்தார். அவர் எழுந்து நின்று 60 நாள் ஆகி விட்டது. இன்னும் திறக்கவில்லை என அமைச்சரிடம் ஆவேசமாக கூறினார்.

உடனே அமைச்சர் சி.வி. கணேசன் அவரை அமருங்கள் என்று கூறினார். ஆனால் மறுபடியும் ஞானதிரவியம் எம்.பி. எழுந்து நின்று, இதனால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று மீண்டும் கூறி வாக்குவாதம் செய்தார்.

இதனால் கோபம் அடைந்த அமைச்சர் சி.வி. கணேசன், அண்ணே... கம்முனு இருங்க.... இது என்ன வீடா? என்று கூறினார். அதன்பின்னரே ஞானதிரவியம் எம்.பி. அமைதியானார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News