உள்ளூர் செய்திகள்

தொழில் செய்யப் போவதாக கூறி பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி; கணவன்-மனைவி மீது வழக்கு பதிவு

Published On 2024-11-06 11:19 GMT   |   Update On 2024-11-06 11:19 GMT
  • கொடுக்கும் பணத்தை சிறிது சிறிதாக தந்துவிடுகிறேன் என்று ஆனந்தியிடமும், அவரது தங்கை அனுவிடமும் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.
  • ஆனந்தியிடம் வாங்கிய பணத்தில் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்தை திருப்பி கொடுத்துவிட்டனர்.

மதுரை:

மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி ஆனந்தி (வயது 32). இவரின் தங்கை அனு, பொட்டபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அப்போது அவருடன் படித்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மதன் என்பவரது மனைவி அம்பிகாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அதன் அடிப்படையில் அம்பிகா அடிக்கடி ஆனந்தி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் அம்பிகா பெரிய அளவில் சொந்தமாக தொழில் செய்ய இருப்பதாகவும் அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் ஆனந்தியிடம் தெரிவித்துள்ளார். அதில் முதலீடு செய்வதற்கு பணம் தேவைப்படுவதாக கூறி ஆனந்தியிடம் கடனாகவும் கேட்டுள்ளார். அவ்வாறு கொடுக்கும் பணத்தை சிறிது சிறிதாக தந்துவிடுகிறேன் என்று ஆனந்தியிடமும், அவரது தங்கை அனுவிடமும் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

அதனை நம்பிய ஆனந்தி கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் டிசம்பர் மாதம் வரை பல்வேறு தவணைகளில் ஆனந்தி மற்றும் அவருடைய சகோதரி அனு ஆகியோர் வங்கி கணக்கிலிருந்து அம்பிகா மற்றும் மதன் ஆகியோருக்கு ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் வரை பணம் அனுப்பி உள்ளனர். பின்னர் ஆனந்தியின் வீட்டிற்கு நேரடியாக வந்து 3 லட்சம் ரூபாய் பணத்தை அம்பிகாவும் அவரது கணவரும் பெற்றுள்ளனர்.

ஆனந்தியிடம் வாங்கிய பணத்தில் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்தை திருப்பி கொடுத்துவிட்டனர். மீதி பணம் ரூ.15 லட்சத்து 25 ஆயிரத்தை திருப்பி தருமாறு ஆனந்தி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு மதனும் அவரது மனைவி அம்பிகாவும் ஆனந்தி மற்றும் அனுவை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆனந்தி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவுப்படி எஸ்.எஸ்.காலனி போலீசார் பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்த அம்பிகா மற்றும் அவரது கணவர் மதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News