உள்ளூர் செய்திகள்

தாய், குழந்தை பலி: பிரசவம் பார்த்த கணவர் சேலம் ஜெயிலில் அடைப்பு

Published On 2022-06-20 08:25 GMT   |   Update On 2022-06-20 08:25 GMT
  • 3 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து அதனை யாருக்கும் தெரியாமல் கணவன்-மனைவி மறைத்தனர்.
  • பார்வதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவருக்கு பூபதி பிரசவம் பார்த்துள்ளார்.

சேலம்:

சேலம் சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பார்வதி (வயது 30). இவர் முதல் கணவரை பிரிந்து ராசிபுரம் புதுப்பட்டியை சேர்ந்த பூபதி (25) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி 2 பேரும் கட்டிட வேலை செய்து வந்தனர்.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் பார்வதிக்கு முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே பார்வதி மீண்டும் கர்ப்பமானார்.

ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து அதனை யாருக்கும் தெரியாமல் கணவன்-மனைவி மறைத்தனர். நேற்று முன்தினம் மதியம் அவர்கள் 2 பேரும் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கோட்டைகரடு பகுதிக்கு வந்தனர்.

அப்போது பார்வதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவருக்கு பூபதி பிரசவம் பார்த்துள்ளார். அப்போது பெண் குழந்தை இறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் அந்த பகுதியில் குழி தோண்டி குழந்தையின் உடலை புதைத்தனர். இதனிடையே சிறிது நேரத்தில் மயங்கிய பார்வதி, அங்கேயே பலியானார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து மல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் குழந்தை மற்றும் பார்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மனைவியை பிரசவத்திற்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் பொதுவெளியில் மருத்துவ விதிமுறைகளை மீறி பிரசவம் பார்த்தது மற்றும் பிரசவத்தின்போது குழந்தை இறந்தது பற்றி போலீசுக்கு தெரிவிக்காமல் புதைத்தது போன்ற குற்றத்திற்காக பூபதியை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் போலீசார், அவரை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

தாய் இறந்த நிலையில், தந்தையை போலீஸ் கைது செய்துள்ளதால் அவர்களது குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News