உள்ளூர் செய்திகள்

பல்லாவரம் மேம்பாலம் அருகே சிக்னல் அமைக்காததால் ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள்

Published On 2023-06-30 07:13 GMT   |   Update On 2023-06-30 07:13 GMT
  • பல்லாவரம்-குன்றத்தூர் சாலை சந்திப்பில் இருந்த சிக்னல் கம்பம் அகற்றப்பட்டது.
  • ஜி.எஸ்.டி. சாலையை கடக்க நடந்து செல்பவர்கள் தடுப்புகளை தாண்டி செல்லும் நிலை நீடித்து வருகிறது.

தாம்பரம்:

பல்லாவரத்தில் உள்ள மேம்பாலம் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திறக்கப்பட்டது. தாமபரத்தில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் இந்த மேம்பாலத்தால் நெரிசல் இன்றி சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் பெருமளவு குறைந்து உள்ளது.

இந்த நிலையில் மேம்பால பணி ஆரம்பிக்கப்பட்ட போது அதன் அருகே பல்லாவரம்-குன்றத்தூர் சாலை சந்திப்பில் இருந்த சிக்னல் கம்பம் அகற்றப்பட்டது. இதன்பின்னர் அந்த இடத்தில் சிக்னல் கம்பம் அமைக்கப்படவில்லை.

மேலும் தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் திரும்பி சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அந்த வழியாக நடந்து செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சந்தை சாலை மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் தொடங்கும் ஒருவழி மேம்பாலம், இந்திரா காந்தி சாலை மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் முடிவடைகிறது. ஜி.எஸ்.டி. சாலையை கடக்க நடந்து செல்பவர்கள் தடுப்புகளை தாண்டி செல்லும் நிலை நீடித்து வருகிறது.

அகற்றப்பட்ட இடத்தில் சிக்னல் கம்பம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஜி.எஸ்.டி சாலையில் இருந்து குன்றத்தூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் இந்திரா காந்தி சாலையில் வலதுபுறம் திரும்ப முடியவில்லை. அதேபோல், குன்றத்தூரில் இருந்து வரும் வாகனங்கள் தாம்பரம் நோக்கி ஜி.எஸ்.டி. சாலையில் 1.5 கி.மீ. சுற்றி செல்ல வேண்டி உள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறும்போது, மேம்பாலம் கட்டுவதற்கு முன்பு போரூர், குன்றத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ஏராளமான வாகனங்கள் சிக்னல் வழியாகச் சென்று வந்தன. தற்போது சிக்னல் இல்லாததால் இந்திரா காந்தி சாலையில் இருந்து ஜி.எஸ்.டி. சாலையைக் கடக்க நடந்து செல்பவர்கள் மீது அடிக்கடி வாகனங்கள் மோதி வருகின்றன. போக்குவரத்து சிக்னல் கம்பம் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. காலை, மாலை நேரங்களில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவ-மாணவிகள் சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது என்றார். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது, இந்திரா காந்தி சாலையில் விரைவில் சிக்னல் அமைக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News