உள்ளூர் செய்திகள் (District)

மு.க.ஸ்டாலினுடன் சந்தித்து பேசினேனா?- எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்ட ஓ.பன்னீர்செல்வம்

Published On 2022-10-20 07:41 GMT   |   Update On 2022-10-20 07:41 GMT
  • எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய போராட்டத்தை எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை.
  • நானும் முதல்வரும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்.

ஆலந்தூர்:

சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து நேற்று வள்ளுவர்கோட்டம் அருகே அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சென்ற போது போலீசார் இதற்கு அனுமதி அளிக்காததால் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, 'முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். இது அநீதி. ஓ.பி.எஸ்-யை பி டீமாக பயன்படுத்தி அ.தி.மு.க.வை வீழ்த்த மு.க.ஸ்டாலின் திட்டமிடுகிறார். ஸ்டாலினும், ஓ.பன்னீர் செல்வமும் அரை மணிநேரம் சந்தித்துப் பேசினர் என்று பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதியம் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய போராட்டத்தை எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை. நானும் முதல்வரும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்.

நான் முதல்வருடன் சந்தித்ததாக கூறுவதை நிரூபிக்க தவறினால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலகுவாரா?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News