கொடைக்கானலில் உச்சகட்ட உறைபனியால் பொதுமக்கள் தவிப்பு
- வயல்வெளிகள், மைதானங்களில் பனி போர்வை போர்த்தியது போல காணப்படுகிறது.
- வீட்டில் உள்ள குடிநீர் ஐஸ்கட்டி போல உறையும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் வானியல் மாற்றங்களால் புயல், மழை என பொதுமக்களை வாட்டி எடுத்து வந்தது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகினர். மழைக்காலம் முடிந்தவுடன் லேசான பனிக்காலம் ஆரம்பமானது.
கடந்த சில வாரங்களுக்கு முன் பகலில் வெயில், மாலை நேரங்களில் பனி என ஆரம்பமான உறை பனிக்காலம் தற்போது பொதுமக்களை உறைய வைக்கும் காலமாக மாறி உள்ளது. 10 டிகிரி, 8 டிகிரி என உறைந்து வந்த பனியின் நிலைமை தற்போது 5 டிகிரிக்கும் குறைவாக நிலவி வருகிறது.
இதனால் காலை நேரங்களில் அன்றாட பணிக்கு செல்வோர் கடும் உறைபனியால் காலதாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாலை நேரங்களில் விரைவாகவே சாலைகள் வெறிச்சோடி விடுகிறது. சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் தற்போது நிலவி வரும் கடும் குளிரால் நடுநடுங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. காலை நேரங்களில் ஏரிச்சாலைப்பகுதி மற்றும் தங்கும் விடுதிகளில் தீ மூட்டி குளிர் காயும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
பொதுமக்களும் குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள ஸ்வெட்டர், ஜர்க்கின், குல்லா போன்ற துணி வகைகளால் மூடி பயணிக்கும் சூழலும் உருவாகி உள்ளது. இனி வரும் காலங்களில் மைனஸ் டிகிரி வெப்பநிலையை தொடும் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை 7 மணிக்கு மேல் காஷ்மீரில் நிலவும் பனிப்பொழிவு போல் பனி சாரல் மழை போல் விழுந்ததையும் காண முடிந்தது.
கொடைக்கானல் நகர் மட்டுமின்றி மலைகிராமங்களிலும் இதுபோன்ற நிலை நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடிங்கிப் போய்உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளதால் வியாபாரிகளும் தவித்து வருகின்றனர். வயல்வெளிகள், மைதானங்களில் பனி போர்வை போர்த்தியது போல காணப்படுகிறது. வீட்டில் உள்ள குடிநீர் ஐஸ்கட்டி போல உறையும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.