வேடசந்தூரில் கோவில்களை அகற்ற வந்த அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் வாக்குவாதம்
- வேடசந்தூர் தாசில்தார் விஜயலட்சுமி ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்களை அகற்ற முயன்றபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- நவம்பர் 17-ந்தேதிக்குள் கோவில்களை அகற்றக்கூடாது என ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள வி.புதுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட மினுக்கம்பட்டியில் கருப்பணசாமி, அங்காள பரமேஸ்வரி, பாப்பாத்தியம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த கோவில்கள் ஓடைப்புறம்போக்கு பகுதியில் இருப்பதாக தெரியவந்தது.
இதனையடுத்து இதேபகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார். இதனை தொடர்ந்து இப்பகுதியில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டன. ஆனால் 3 கோவில்கள் மற்றும் 2 குடிநீர் தொட்டிகள் மட்டும் அகற்றப்படவில்லை.
இதனிடையே அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் கோவில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடுத்தார். ஆனால் ஏற்கனவே வழக்கு தொடர்ந்து சுப்பிரமணி மீண்டும் நீதிமன்றத்தை அணுகியதால் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனையடுத்து வேடசந்தூர் தாசில்தார் விஜயலட்சுமி ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்களை அகற்ற முயன்றபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பழனி ஆர்.டி.ஓ சரவணன் தலைமையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேடசந்துர் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் கோவில்களை இடிக்க கூடாது என்றும், வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல வசதியாக மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
நவம்பர் 17-ந்தேதிக்குள் கோவில்களை அகற்றக்கூடாது என ஒரு தரப்பினர் தெரிவித்தனர். அதன்படி கெடு இன்றுடன் நிறைவடைவதால் தாசில்தார் விஜயலட்சுமி, வேடசந்தூர் டி.எஸ்.பி துர்க்காதேவி மற்றும் அதிகாரிகள் கோவில்களை அகற்றும் முயற்சியில் இறங்கினர். ஆனால் பொதுமக்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தியும், ஜே.சி.பி எந்திரத்தை சிறைபிடித்தும் போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் சமரசம் செய்தும் கேட்காமல் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் உருவானது.