கோபிசெட்டிபாளையத்தில் கோர்ட்டு உத்தரவுப்படி வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
- போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்க பொக்லைன், ஜே.சி.பி. எந்திரத்தை இன்று காலை கொண்டு வந்தார்.
- முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட சக்தி நகர் என்ற பகுதியில் 25 ஆண்டு காலமாக 13 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 2001-ம் ஆண்டு நத்தம் புறம்போக்கு நிலத்தில் 13 குடும்பத்தினருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்கினர். இதைத்தொடர்ந்து 13 குடும்பத்தினரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் 13 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலம் தனக்கு சொந்தமானது என்று கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பொதுமக்கள் தரப்பில் சரியாக ஆஜராகாத நிலையில் தனி நபருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் வீடுகளை காலி செய்து கொள்ளுமாறு அந்த நபர் பேனர் வைத்தார். ஆனால் பொதுமக்கள் யாரும் வீட்டை காலி செய்யவில்லை.
இதையடுத்து அந்த நபர் போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்க பொக்லைன், ஜே.சி.பி. எந்திரத்தை இன்று காலை கொண்டு வந்தார். காலை 6.40 மணி அளவில் வீடுகளை இடிக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக மின் இணைப்புகள் துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுபற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த 13 குடும்பத்தை சேர்ந்தவர்களும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி. பாலமுருகன், தாசில்தார் உத்திரசாமி, இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.