போலீசாரை சுற்றி வளைத்து தாக்கிய சூதாட்ட கும்பல்- பெண் உள்பட 15 பேர் மீது வழக்கு
- வீட்டில் பணம் வைத்து சூதாடியவர்களை போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
- வீட்டில் திடீரென லைட்டை அணைத்து விட்டனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புது கொத்துக்காடு என்ற பகுதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடுவதாக கடத்தூர் சப்- இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீஸ்காரர்கள் அன்பழகன், வேல்முருகன் ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.
அப்பொழுது அந்த வீட்டில் பணம் வைத்து சூதாடியவர்களை போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் திடீரென லைட்டை அணைத்து விட்டனர். பின்னர் வீட்டின் வெளியே கூடியிருந்தவர்கள் திடீரென போலீசாரை சூழ்ந்து கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியும், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டுக்கட்டு மற்றும் அதில் இருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக கடத்தூர் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (28), துரைசாமி (54), குமார் (27), சுரேஷ் (30), பிரபு (28), ராமசாமி (38), சந்திரசேகர் (32), பழனிச்சாமி (54), ஆறுமுகம் (50), வெள்ளியங்கிரி (40), முருகன் (35), பழனிச்சாமி (35), வசால் (30), ராதா (35), பொன்னுச்சாமி (40) ஆகிய 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரை சூதாட்ட கும்பல் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.