அரசு பள்ளி மாணவனை காரில் கடத்த முயற்சி- மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
- மொழி புரியாமல் என்ன என்று கேட்டபோது, திடீரென அந்த மாணவனை பிடித்து இழுத்து சென்று உள்ளனர்.
- சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்தபோது, மாணவன் அடையாளம் கூறிய கார் வேகமாக செல்வது பதிவாகியுள்ளதை வைத்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த நாகம்பட்டி போயர்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன். இவர் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதால், மதியம் 1 மணிக்கு மேல் பள்ளி செயல்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அவரது வீட்டில் இருந்து சுமார் 11.50 மணியளவில் கிளம்பி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் நின்றுக்கொண்டிருந்த வெள்ளை நிற காரை கடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அதிலிருந்து வெளியே வந்த அடையாளம் தெரியாத நபர், பேசுவது போல் இந்தியில் பேசியுள்ளார்.
மொழி புரியாமல் என்ன என்று கேட்டபோது, திடீரென அந்த மாணவனை பிடித்து இழுத்து சென்று உள்ளனர். அதற்குள்ளாக சுதாரித்துக்கொண்ட மாணவன், தன்னை யாரோ கடத்துவதற்கு முயற்சிப்பதை உணர்ந்து, கையிலிருந்த பள்ளி பையை கழட்டிவிட்டு அவர்களிடமிருந்து தப்பித்து அங்கிருந்து ஓடியுள்ளார். இதனை உணர்ந்த சக மாணவர்களும் கையிலிருந்த பையை கீழே போட்டுவிட்டு அனைவரும் ஓடியுள்ளனர்.
அப்போது அவ்வழியே யாரும் செல்லாததால், அந்த கார் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றது. பின்னர் மாணவன் பையை எடுத்து கொண்டு உடன் வந்த அனைத்து மாணவர்களையும் அழைத்து கொண்டு, சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள மத்தூர் போலீஸ் நிலையம் சென்று அங்கு புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர். அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்தபோது, மாணவன் அடையாளம் கூறிய கார் வேகமாக செல்வது பதிவாகியுள்ளதை வைத்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவனிடம் கேட்டபோது, பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது காரை நிறுத்திவிட்டு வந்த நபர் என்னிடம் பேசுவது போல் பேசிவிட்டு, திடீரென என்னை இழுத்து காரில் போட முயற்சித்தார். நான் அவரிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டேன். அப்போது ஏற்கனவே காரியில் இரு அரசு பள்ளி மாணவர்கள் இருந்ததை கவனித்தேன். அதில் ஒரு மாணவன் காரிலிருந்து வெளியே கத்திக்கொண்டு வந்தபோது, அவனை தலையில் தாக்கி உள்ளே தூக்கி போட்டனர் என தெரிவித்தான். இந்த சம்பவம் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.