மாணவிகள் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதிகள் தலைமையில் குழு- பிரேமலதா வலியுறுத்தல்
- மாணவிகள் மரண செய்தி வருவது வருத்தம் அளிக்கிறது. முதலில் மாணவிகளின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும்.
- சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்வதை விட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
அவனியாபுரம்:
தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் இன்று தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுரை வந்த பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு என்பது மக்களுக்கானது தான் என்பதை உணர்ந்து வரி விதிக்க வேண்டும். தொடர்ந்து வரி உயர்வால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதுவும் கொரோனா காலத்திற்கு பின்பு மக்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரி உயர்வு அதுவும் பேக் செய்யப்பட்ட பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.வரி என்பது மக்களை கடுமையாக பாதிக்கும். ஒரு அரசு என்பது மக்களுக்கான அரசு என்பதை உணரவேண்டும்.
மாணவி ஸ்ரீமதி இறந்து புதைத்த இடத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் தொடர்ந்து மாணவிகள் மரண செய்தி வருவது வருத்தம் அளிக்கிறது. முதலில் மாணவிகளின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்வதை விட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
மாணவிகள் கொலை செய்யப்பட்டனரா? அல்லது தற்கொலை செய்தார்களா? அப்படி தற்கொலை செய்தால் அதற்கான காரணம் என்ன என்பதனை அறிய தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது பல ஊழல் வழக்குகளை நடத்தியது. அதேபோல் தற்போது பா.ஜ.க. ஊழல் வழக்குகளை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஆளும் கட்சி ஆண்ட கட்சிகளில் இருந்து ஊழல் வழக்குகளை நடத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தே.மு.தி.க. நிர்வாகிகள் அழகர், கணபதி, பாலச்சந்தர், மணிகண்டன் உள்பட பலர் இருந்தனர்.