சேலம் மத்திய சிறை கைதி திடீர் மரணம்
- கைதிக்கு இன்று காலை 6 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
- கைதிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு குறித்து சிறை ஊழியர்கள், சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் வெங்கடேசன் (வயது 40).
இவர் கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி உறவினர் ஒருவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். இது தொடர்பாக விசாரணை நடத்திய அழகாபுரம் போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். வெங்கடேசனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரை இதுவரை யாரும் ஜாமீன் எடுக்க முன் வராததால் தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை அறிந்த சிறை ஊழியர்கள், சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மத்திய சிறையில் இருந்த விசாரணை கைதி இறந்ததால் விரைவில் சிறைக்கு சென்று மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உள்ளார்.